ஜ்ய துர்காவின் கருணையினாலே
ஜோதிடத்தில் எந்த ஊர் ஜாதகருக்கு பலன் கொடுக்கும் என்பதற்கு சில கணிதங்களை ரகசியத்துள் ரகசியமாக நம்முடைய முன்னோர்கள் கொடுத்துள்ளார்கள். அதில் நட்சத்திர நாம எழுத்து முறை, ராசி நாம எழுத்து முறை, காகினி முறை, கடபயதி முறை, துருவ முறை போன்றவைகள் பொதுவாக பண்டிதர்களால் பலன் கூற பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய அனுபவத்தில் காகினி முறையில் பலன் கூறுவது நடைமுறைக்கு சரியாக வருவதை அறியமுடிகிறது. இதனை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு ஆகும்.
காகினி முறையினை கூறும் ஒரு சமஸ்கிருத பாடலானது
யத்மம் த்வயம்கஸுதே சதிங்மிதமஸெள க்ராம ஸுபோ நாமபாத் ஸ்வம் வர்க த்விகுனம் விதாய பரவர்காட்யம் கஜை ஸேஷிதம் காகினி
காகினி என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு ஒரு சிறிய அளவீடு அல்லது மதிப்பீடு என பொருள்படும்.இதன்படி காகினி முறையினை அறியும் முறை.
காகினி முறை என்பது பெயர் மற்றும் ஊரின் முதல் எழுத்தினை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்குரிய எண் அறிந்து பலன் காணும் முறை ஆகும்.
எழுத்துக்களுக்கான எண்கள்
எண் 1: உயிர் எழுத்துக்கள் அனைத்தும் அதாவது அ, ஆ, இ, ஈ, முதல் ஒள வரை உள்ள அனைத்து எழுத்துக்களும் எண் 1 ஐ குறிக்கும்
எண் 2: க வர்கம், ங வர்கத்தினை மட்டும் குறிக்கிறது. அதாவது இங்கு க வர்கம் என்பது க, கா, கி, கீ, கெ, கே,……போன்ற அனைத்து எழுத்தினையும் குறிக்கும்.
எண் 3: ஜ வர்கம், ஞ வர்கத்தினை மட்டும் குறிக்கிறது.
எண் 4: ட வர்கம், ண வர்கம், ன வர்கத்தினை மட்டும் குறிக்கிறது.
எண் 5: த வர்கம், ந வர்கத்தினை மட்டும் குறிக்கிறது.
எண் 6: ப வர்கம், ம வர்கத்தினை மட்டும் குறிக்கிறது.
எண் 7: ய வர்கம், ர வர்கம், ற வர்கம், ள வர்கம், ல வர்கம், ழ வர்கம், வ வர்கத்தினை மட்டும் குறிக்கிறது.
எண் 8: ச வர்கம், ஷ வர்கம், ஹ வர்கத்தினை மட்டும் குறிக்கிறது.
முதலில் பெயரின் முதல் எழுத்து எந்த வர்கத்தில் உள்ளது அதனின் எண் என்ன என அறிய வேண்டும்.
பின் ஊரின் முதல் எழுத்து எந்த வர்கத்தில் உள்ளது அதனின் எண் என்ன என அறிய வேண்டும். இரண்டினையும் பின்வரும் முறையில் பயன்படுத்தி காகினி எண் காண வேண்டும்.
காகினி எண்ணை ஒருவரின் பெயருக்கும் காண வேண்டும், ஊருக்கும் காண வேண்டும் இவற்றில் எது பெரியதோ அதுவே சிறந்தது. ஊரை விட ஒருவரின் பெயரின் காகினியே பெரிதாக இருக்க வேண்டும்.
காகினி எண் கண்டுபிடிக்கும் முறைகள்
முதலில் பெயரின் காகினி எண் கண்டுபிடிக்கும் முறை
பெயரின் முதல் எழுத்துக்காண எண்ணை 2ஆல் பெருக்கி அதனை ஊரின் முதல் எழுத்துக்காண எண்ணுடன் கூட்ட வேண்டும். வரும் தொகையினை 8ஆல் வகுக்க கிடைக்கும் மீதி பெயரின் காகினி எண் ஆகும்.
ஊரின் காகினி எண் கண்டுபிடிக்கும் முறை
ஊரின் முதல் எழுத்துக்காண எண்ணை 2ஆல் பெருக்கி அதனை பெயரின் முதல் எழுத்துக்காண எண்ணுடன் கூட்ட வேண்டும். வரும் தொகையினை 8ஆல் வகுக்க கிடைக்கும் மீதி ஊரின் காகினி எண் ஆகும்.
உதாரணமாக அடியேன் முன்னமே கூறிய எனது நண்பரின் மகனுக்கு எந்த ஊர் சிறந்தது என காண்போம். அவர் மகனின் பெயர் கார்த்திகேயன். அவருக்கு ஹைதராபாத் மற்றும் புனேவில் வேலைகிடைத்திருக்கிறது. அதில் எது சிறந்தது என அறிய முதலில் பெயர் மற்றும் ஊரின் நாம எழுத்துக்கான எண்னை அறிய வேண்டும்.
கார்த்திகேயன் என்பதால் முதல் எழுத்து கா என எடுத்துக்கொண்டு அதற்கான எண் 2 என குறித்துக்கொள்ளவேண்டும்
ஹைதராபாத் என்பதால் முதல் எழுத்து ஹை என எடுத்துக்கொண்டு அதற்கான எண் 8 என குறித்துக்கொள்ளவேண்டும்.
புனே என்பதால் முதல் எழுத்து பு என எடுத்துக்கொண்டு அதற்கான எண் 6 என குறித்துக்கொள்ளவேண்டும்.
பெயருக்கான காகினி அறியும் முறை.
பெயரின் முதல் எழுத்துக்காண எண்ணை 2ஆல் பெருக்கி அதனை ஊரின் முதல் எழுத்துக்காண எண்ணுடன் கூட்ட வேண்டும். வரும் தொகையினை 8ஆல் வகுக்க கிடைக்கும் மீதி பெயரின் காகினி எண் ஆகும்.
இதன்படி பெயர் எண் 2 ஊர் எண் 8 (ஹைதராபாத்)
பெயர் காகினி
2*2=4
4+8=12
12/8 மீதி 4
இங்கு 4 என்பது பெயர் காகினி ஆகும்.
ஊரின் காகினி எண் கண்டுபிடிக்கும் முறை
ஊரின் முதல் எழுத்துக்காண எண்ணை 2ஆல் பெருக்கி அதனை பெயரின் முதல் எழுத்துக்காண எண்ணுடன் கூட்ட வேண்டும். வரும் தொகையினை 8ஆல் வகுக்க கிடைக்கும் மீதி ஊரின் காகினி எண் ஆகும்.
இதன்படி ஊர் காகினி
8*2=16
16+2=18
18/8 மீதி 2
இங்கு 2 என்பது ஊர் காகினி ஆகும்.
ஆகவே ஜாதகருடைய காகினி எண் (4) ஹைதராபாத் காகினி எண்ணை (2) விட அதிகமாக உள்ளது எனவே ஜாதகருக்கு ஹைதராபாத் நகர் சிறந்தது ஆகும்.
அடுத்ததாக புனே நகருக்கு காகினி எண் அறிவோம்
பெயர் காகினி
பெயர் எண் 2 ஊர் எண் 6 (புனே)
2*2=4
4+6=10
10/8 மீதி 2
இங்கு 2 என்பது பெயர் காகினி ஆகும்.
ஊர் காகினி
6*2=12
12+2=14
14/8 மீதி 6
இங்கு 6 என்பது ஊர் காகினி ஆகும்.
ஆகவே ஜாதகருடைய காகினி எண் (2) புனே காகினி எண்ணை (6) விட குறைவாக உள்ளது எனவே ஜாதகருக்கு புனே நகர் சிறந்தது அல்ல.
இங்கு கார்திகேயனுக்கு ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பில் புனே நகருக்கு செல்வதை விட ஹைதராபாத் நகருக்கு செல்வது சிறந்தது என எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர புனே நகருக்கு செல்வது சிறப்பாக இருக்காது என எடுத்துக்கொள்ளகூடாது.
இது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இதனுடைய ரகசியம் இன்னும் அலாதியானது. சம்ஸ்கிருத எழுத்துக்களுக்கு மட்டுமே பெயரின் முதல் எழுத்து எண் அறியும் முறை உள்ளது. முடிந்தவரை இதனை தமிழில் தந்துள்ளேன்.
குறிப்பு. காகினி எண்ணை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு வரக்கூடிய வாய்ப்புகளில் எது சிறந்த வாய்ப்பு என அறிய மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Leave a reply