ஜயதுர்காவின் கருணையினாலே!!
ஜோதிஷம் கற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கு பயன் படக்கூடிய பலன் கூறும் டெக்னிக் எழுத விரும்பி இதை தருகிறேன்.
வேதாங்க ஜோதிஷத்திற்கு 18 ரிஷிகள் சித்தாந்தம் எழுதியிருந்தாலும் அவற்றுள் ப்ருகு, பராசரர், கர்கர் போன்றோர் முக்கியமாவர். ஜோதிஷத்தில் காணப்படுகிற அனைத்து நூல்களும் இவர்களுடைய நூல்களை தழுவியே எழுதப்பட்டிருக்கிறது. இவர்களுடைய நூல்களை படித்தாலே ஜோதிடத்தில் உள்ள அனைத்து நூல்களையும் படித்ததற்கு சமமானதாக கருதலாம். புத்திசாலி மூல நூலை படிப்பான் என்ற வாசகத்தினங்க, இம்மூவருடையதை படித்தாலே ஜோதிஷத்தில் தெளிவு பிறக்கும்.
இவர்களுள் ப்ருகு மகரிஷி பத்து லக்ஷம் ஜாதகங்களுக்கான குறிப்பெழுதி பலன் தந்துள்ளார்.
பராசரி மகரிஷி 10000 வருடம் தவமிருந்து ஜோதிஷத்திற்கு பல்வேறு முறைமைகளை கொடுத்துள்ளார் .
கர்க மகரிஷி ஹோரை, ஸம்ஹிதை போன்றவற்றினை
சில நூல்களில் சுருக்கமாக தந்துள்ளார்.
கர்க மகரிஷி பாரத்வாஜ மகரிஷிக்கு மகனாய் அவதரித்தவர். இவர்கள் கிருஷ்ணனின் குடும்பத்திற்கு குல குருவாக இருந்தவர்கள் என்ற கருத்தும் உண்டு.
கர்க மகரிஷி எழுதிய நூல்களில் கர்க ஹோராவும், கர்க ஸம்ஹிதையும் இன்றளவும் நுட்பமாக விஷயங்களை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
கர்க ஹோராவில் உள்ள 1460 ஸ்லோகங்களில் நிறைய விஷயங்கள் இருந்தாலும் அதில் நான் முக்கியமாக கருதியது கர்க மகரிஷி கூறுகிற சத்ர(குடை) யோகமாகும்.
சத்ர (குடை) யோகம்.
சத்ர என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு குடை என்று பொருளாகும். ஒருபாவத்திற்கு 12, 2, மற்றும் 7 ம்பாவத்தில் இருக்ககூடிய கோளே அப்பாவத்தின் நன்மை தீமையை தீர்மானிக்கும் என்பதாம்.
சுருக்கமாக சொல்வதென்றால் ஒருபாவத்திற்கு இருபுறமும் அதற்கு 7 லும் அமைந்த கோளே அப்பாவ பலனை தீர்மானிக்கும் என்பதாம்.
இதன ஏன் சத்ர (குடை) யோகம் என கூறவேண்டும்.
குடையானது மேற்கூரை மற்றும் கைப்பிடியை கொண்டிருப்பது போல் இந்த யோக அமைப்பில் 12,1,2 ம் பாவம் மேற்கூரையாகவும், 7ம் பாவம் கைப்பிடியாகவும் காணப்படுகிறது.( பார்க்க படம்)
குடையின் மேற்கூரை பலமாக இருந்தால் எவ்வாறு குடை வைத்துக்கொண்டவருக்கு உதவுமே, அதேபோல் சுப கிரஹாமானது மேற்கூரை போன்ற 12, 1, 2 ம் பாவத்தில் இருந்தால் நன்மையை தரும்.
அதேபோல் மேற்கூரையில் எங்கு கிழிசல் இருந்தாலும் அது எவ்வாறு அவதியை கொடுக்குமோ, அதேமாதிரி ஒருபாவத்திற்கு இருபுரத்தில் எங்கு பாப கிரஹம் இருந்தாலும் அவை தீமையே தரும் என்பதாகும்.
அதேபோல் குடையின் கைப்பிடியை கொண்டு மேற்கூரையை நமக்கு தகுந்தாற்போல் மாற்றி வைத்துக்கொள்வது போல், 7ம் மிடத்தில் இருக்ககூடிய கோளினை பொறுத்து ஒருபாவத்தின் இருபுறமும் இருக்ககூடிய கோள் பலனை தீர்மானிக்க முடியும் என்பதாகும்.
சரி அடுத்ததாக சுபகிரஹம் பாபகிரஹம் தீர்மானிப்பது எப்படி என காண்போம். பொதுவாக கிரஹங்களை இயற்கை காரஹத்தினை பொறுத்தும் பாவ ஆதிபத்தியத்தை பொறுத்தும் சுப கிரஹம், அசுப கிரஹம் என பிரிக்கிறோம்.
இயற்கையில் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், பாவருடன் சேராத புதன் சுபராவர். மற்றவை பாபர் ஆவர்.
பாவாதிபத்தியம் ஒவ்வொரு லக்கினத்திற்கும் தனித்தனியாக பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக லக்கினாதிபதிக்கு பகை கிரஹம் பாவ ஆதிபத்தியம் பெற்றிருக்கும்.
குடை யோகத்தில் காரஹ பாப கிரஹம் காரஹத்திற்கு மட்டும் தீய பலனையும், பாவாதிபத்திய பாப கிரஹம் அந்த ஆதிபத்தியம் தொடர்பான தீய பலனையும் கொடுக்கும்.
சுபகிரஹமும் பாப கிரஹமும் கலந்து இருந்தால் எண்ணிக்கையில் எவை அதிகமோ அதற்கேற்ப பலன் உண்டு.
இக்குடை யோகத்தை கொண்டு 12 பாவத்திற்கும் தனித்தனியாக பலன் பார்க்கமுடியும்.
எந்தபாவத்திற்கு பலன் காண வேண்டுமோ அந்த பாவத்திலிருந்து 2, 12 மற்றும் 7ம் பாவத்தில் உள்ள கிரஹங்களை கொண்டு பலன் அறியவேண்டும்.
இக்குடை யோகத்தை சற்று விரிவாக கூறினால்,
கோண பாவத்தை 4 ஆக பிரிக்கலாம் அவை
தர்ம (அறம்) கோணம்—1,5,9
அர்த்த (பொருள்) கோணம்—2,6,10
காம்ய (இன்பம்) கோணம்—3,7,11
மோக்ஷ (வீடு) கோணம்—4,8,12
லக்ன பாவத்திற்கு குடை யோகப்படி 1ம் பாவம் தர்ம கோணத்திலும், 2ம் பாவம் அர்த்த கோணத்திலும், 7ம் பாவம் காம்ய கோணத்திலும், 12ம் பாவம் மோக்ஷ கோணத்திலும் அமையும்.
எந்த பாவத்திற்கு குடை யோக அமைப்பினை எடுத்தாலும் இதே போல் 4 கோணத்திலும் அமையும். திரிகோணஸ்தானத்தில் உள்ள கிரஹம் ஒன்றாக செயல்படும் என்ற விதிக்கிணங்க 1,5,9ம் பாவத்தில் உள்ள கிரஹம் 1ம் பாவம் மூலமும், 2,6,10ம் பாவத்தில் உள்ள கிரஹம் 2ம் பாவம் மூலமாகவும், 3,7,11ம் பாவத்தில் உள்ள கிரஹம் 7ம் பாவம் மூலமாகவும், 4,8,12ம். பாவத்தில் உள்ள கிரஹம் 12ம் பாவம் மூலமாகவும் செயல்படும் என்பதாம். இதுவே குடை யோகத்தின் சிறப்பாகும்.
மேலும் ஒவ்வொரு பாவத்திற்கும் 1, 2, 7, 12ம் பாவத்தை பார்க்கும் கிரஹம் இயற்கை காரஹம், பாவ ஆதிபத்தியத்தை பொறுத்து பலனை மாற்றி தரும். இவை திரிகோணத்தில் இருக்ககூடிய கிரஹத்தினை விட அதிக ஆதிக்கத்தை செலுத்துகிறது.
வேசி, வோசி, உபயச்சாரி, அபயச்சாரி, ஸுனபா, அனபா, துருதரா, கேமத்துருமம், பாபகர்தாரி, சுபகர்தாரி, அதி யோகம் போன்ற யோகங்களுக்கு குடை யோகமே அடிப்படையாகும்.
Leave a reply