பதினொன்றாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் தன் பெயர் புகழ் முதலானவற்றைக் கொண்டே சம்பாத்தியங்கள் உண்டாவதும் மிகவும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கையும் நல்ல குணமும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பரந்த நோக்கமும் நாவன்மையும் எழுத்து பேச்சுத் திறமைகளால் பொருள் லாபங்களும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பந்தயசூதாட்ட வியாபாரங்களில் லாபங்களும் புதையல் கிடைத்தது போல் சொத்துக்கள் வந்து சேர்வதும் தன் வாக்கினாலேயே லாபங்களை அடைவதும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். தானாக பொருள் வந்து சேரும். தீர்த்த யாத்திரை மகான்களின் சேர்க்கை முதலியன உண்டாகும். சகோதரர்களுக்கு லாபங்கள் உண்டாகும். ஆலயங்களைக் கட்டுதல், அற நிலையங்களை ஸ்தாபித்தல் போன்ற பொறுப்புக்களையும் ஏற்று நிதி திரட்டி அவற்றை நடத்தி வைக்கும் படியான பாக்கியமும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை நடத்தினால் கல்வியால் மிக உயர்ந்த பதவியை அடைதல், ஞானியாதல் எல்லாவிதங்களிலும் சுகசௌக்கியங்கள் நிறைந்த வாழ்க்கையும் சகல நன்மைகளும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஐந்தாமிடத்தில் இருந்து தசை நடத்தினால் புத்திர லாபங்கள் ஏற்படுவதும், தனக்குத் தன் புத்திரர்களால் லாபங்கள் உண்டாவதும் மேலும் மேலும் சொத்த சுகங்கள் விருத்தியாவதும் சகலசித்திகளும் நடைபெறும் மாந்திரீகப் ஜோதிடம் போன்ற வித்தைகளும் அறியும் சக்தியும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் பகைவரால் தொல்லைகளும் அன்னிய தேசத்தில் அன்னியரிடம் கைகட்டி பிழைக்கும் படியான நிலைமையும் சொத்து சுகம் இல்லாத பரதேசி போன்ற வாழ்க்கையும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை நடத்தினால் மனைவிக்கு மரணமும் இரண்டாவது அல்லது மூன்றாவது விவாகம் ஏற்படும். அன்னிய தேசங்களில் சஞ்சரிப்பதன் மூலம் லாபங்கள் உண்டாகும். அதிகமான காமவேட்கையும் அன்னிய ஸ்திரீகளை அடைவதும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தன்னுடைய சக்தி யுக்தி உழைப்பு முதலியவற்றால் அன்னியரே லாபம் அடைவார்கள் தனக்கு அற்ப லாபங்களே உண்டாகும். குடும்பத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் படியான நிலைமையும் உண்டாகும். எப்பொழுதும் எதற்காவது ஏங்கிக் கொண்டே இருக்கும கேவலமான வாழ்க்கை உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தான தர்மங்கள் யாக எக்கியங்கள் செய்து புண்ணிய லாபங்களை அடைவதும் அரசர்களாலும் பிரபுக்களாலும் பூஜிக்கத் தக்க நிலைமையும் தர்மம் தவறாத வாழ்க்கையும் மதியூகமும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தொழில் மேதையாக விளங்குவதும் தான் கூறும் ஆலோசனைகளுக்காகவே லாபங்களை அடைதலும் தொழிற் திறமைக்காக எல்லோராலும் மதிக்கப்படத்தக்க நிலைமையும் சகல சுகங்களும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பலவிதமான லாபங்களும் சுகபாக்கியங்களும் தாமே வந்தடைதலும் அழகிய இளம்பெண்களின் சகவாசமும் கலைத்திறமைகளும் கல்வியால் பிரகாசமும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் அதிகமான காதல் வேட்கையும் பெண்களை சுலபமாக வசீகரம் செய்யும் சக்தியும் காமலீலைகளால் பொருள் விரயமும் உண்டாகும்.
Leave a reply