பத்தாமதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் கவித்துவ சக்தியும் தான் இருந்த இடத்திலிருந்தே தொழிலும் புகழும் அடையும் படியான யோகமும் மேலும் மேலும் செல்வமும் புகழும் விருத்தியாவதும் உண்டாகும்.
பத்தாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் எழுத்தாளர் அல்லது பிரசங்கியாக புகழும் பொருளும் அடைதலும் தொழில் விருத்தியும் குடும்ப சுகங்களும் உண்டாகும்.
பத்தாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தொழில் விருத்திக் குறைவும் தன் சகோதரர்களை அண்டிப்பிழைக்கும் நிலைமையும், அல்லது சொத்துக்களால் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவனமும் சிறு சிறு தொழில்களை ஆரம்பித்துவிட்டு விடுதலும் எதிலும் நிலையற்ற தன்மையும் உண்டாகும்.
பத்தாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை நடத்தினால் கல்வி மேம்பாட்டால் உயர்ந்த பதவி அடைதலும் வாகன லாபம் அல்லது வாகன சம்பந்தமான விருத்தியும், குருபக்தி, தெய்வபக்தி, முதலானவைகளும் தாய் தந்தையரிடம் விஸ்வாசமும் அவர்களுக்கு நன்மையும் ஏற்படுதலும் புகழ் பராக்கிரமம் பாக்கியம் ஆகியவை விருத்தியாவதும் உண்டாகும்.
பத்தாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பலவிதமான தனலாபங்களும் பல தொழில்கள் ஆரம்பித்து நடத்தி வெற்றியடைதலும் தொழிலிலே கவனமாக இருப்பதும் தொழில் சம்பந்ததப்பட்டதையும் வெகு விரைவில் கிரகித்து கொள்ளும் தன்மையும் புத்திர லாபமும் தன் மக்கள் தனக்கு மீறிய அறிவும் செல்வமும் உடையவராதலும் அல்லது தன் பிள்ளைகளிலோருவன் தனக்கு அடங்காமல் பிரிந்து போய் விடுவதுமான பலன்கள் நடைபெறும்.
பத்தாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தன் தொழில் புகழ் முதலியவற்றை எதிரிகள் கைகொள்வதும் அல்லது அவற்றை வேறொருவனுக்கு விற்றுவிட்டு தான் புதிய தொழிலை ஆரம்பிக்க முயல்வதும் தொழில் இல்லாமல் அலைய நேர்வதும் பிற்பகுதியில் தொழில் வாய்ப்பும் சுகமும் உண்டாவதும் உண்டாகும். மொத்தத்தில் அலைச்சலும் கஷ்டங்களுமே அதிகமாக இருக்கும்.
பத்தாமாதிபன் ஏழாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் வெளியூர் அல்லது அன்னிய நாட்டில் தொழில் ஏற்படுவதும் மனைவியின் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பொறுப்புகள் உண்டாவதும் மனைவியின் பணத்தைக்கொண்டு தொழில் நடத்தி மேலான நிலைக்கு வருதல் போன்ற பலன்கள் உண்டாகும். பாபக்கிரமாக இருந்தால் கெட்ட வழிகளில் சம்பாத்தியம் ஏற்படும்.
பத்தாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் நோயின் காரணமாக தொழில் முடக்கம் ஏற்படும். அபவாதம், கெட்டப் பெயர், தொழில் நஷ்டங்கள் பலத்த நஷ்டம் முதலானவை ஏற்படலாம். எவ்வித தொழிலும் இல்லாமலும் அன்னியரை அண்டிப் பிழைக்கும் படியான நிலைமையும் தேசாந்திரம் போகும்படியான நிலைமைகளும் உண்டாகும்.
பத்தாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை நடத்தினால் அன்னை தந்தையர் தெய்வகுருபக்தி அவர்களுக்கு சுகமும் ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் நெறிதவறாத நடத்தையும் ஏற்படுவதும், அதிகமான பாக்யம் புகழ் இல்லாத அடக்கமான வாழ்க்கையும், துறவு பூணும்படியான அல்லது சன்யாச மனப்பான்மையும் உண்டாகும்.
பத்தாமாதிபன் பத்தாமிடத்தலிருந்து தசை நடத்தினால் கல்வி மேன்மையும் மேலான தொழிலில் தலைமை ஸ்தானமும் புகழும் உண்டாகும். தொழிலில் நேர்மையும் முறை பிசகாத பண்பும் சத்திய நெறி நடத்தலும் புகழும் கௌரவமும் உண்டாகும்.
பத்தாமாதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் தொழிலில் மேலான நிலைமையும் தன் முயற்சி இன்றியே லாபங்கள் உண்டாதலும் பலவிதமான வருமானங்களால் சொத்து சுகம் ஏற்பட்டு எப்பொழுதும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவித்தலும், புத்திரலாபங்களும், புத்திரர்க்கு சுகங்களும் உண்டாவதுமாகும்.
பத்தாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தொழில் நஷ்டங்களும் எவ்விதத் தொழிலும் செய்ய சக்தியில்லாதவனாக இருப்பதும் தொழிலில் பகைவரால் நஷ்டங்களும் அடிமைப் பிழைப்பும் உண்டாகும்.
Leave a reply