ஜ்ய துர்காவின் கருணையினாலே…
கிரஹங்களின் வேகத்தை பொறுத்து அது சமா,சாரா,அதிசாரா, மந்தா, மந்ததாரா, விகலா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
கிரஹங்களின் சாதாரண வேகத்தை பொதுவாக சமா அல்லது மத்ய கதி என அழைக்கின்றனர்.. சாதாரண வேகமான மத்ய கதியை விட கிரஹங்கள் வேகமாக பயனித்தால் அது சாரா என அழைக்கப்படுகிறது.. சாராவில் கிரஹங்கள் பயனிக்கும் போது ஒரு ராசியிலிருந்து வேறொரு ராசிக்கு பயனித்தால் அது அதிசாரம் என அழைக்கப்படும்.
சாதாரண வேகமான மத்ய கதியை விட கிரஹங்களின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது அது மந்தா என அழைக்கப்படுகிறது. மந்தாவை விட கிரஹங்களின் வேகம் குறையும் போது அது மந்ததாரா என அழைக்கப்படும்.. கிரஹங்கள் பயனிக்காமல் ஒரே இடத்தில் இருந்தால் அவை விகலா அல்லது ஸ்தம்பி என்று அழைக்கப்படும்.
வக்ரம் என்பது கிரஹங்கள் ராசி மண்டலத்தில் பின்னோக்கி வருவதை குறிக்கும். வக்ரத்தில் உள்ள ஒரு கிரஹம் வக்கிர நிவர்த்தியாகி நேரே பயனிக்கும் போது ஸ்தம்பி நிலையை அடைந்து பின் சாதாரண வேகத்தில் பயணிக்கும். கிரஹங்கள் பின்னோக்கி வரும் போது அதற்கு முன் ராசியில் பிரவேசிப்பது அனுவக்ரம் என அழைக்கப்படுகிறது.
1.சுக்ரன், புதன் கிரஹங்கள் சூரியனுடன் இணைந்து இருக்கும் போது அஸ்தமனம் அடைந்தபோதே வக்ரமும் அடைய முடியும்.
2.சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து சுக்ரன், புதன், செவ்வாய், குரு, சனி ஆகியவை இரண்டாம் இடத்தில் இருந்தால் சாதாரண வேகத்தை விட கூடுதலான வேகத்தில் பயணிக்கும். (சாரத்தில் ஓடும்).
3.சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து சுக்ரன் மூன்றாம் இடத்தில் இருந்தால் சாதாரண வேகத்தில் பயணிக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய், குரு, சனி ஆகியவை சூரியனுக்கு மூன்றாம் இடத்தில் இருந்தால் சாதாரண வேகத்தை விட கூடுதலான வேகத்தில் பயணிக்கும்.(சாரத்தில் ஓடும்).
4.சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய், குரு, சனி ஆகியவை நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் இருந்தால் சாதாரண வேகத்தை விட கூடுதலான வேகத்தில் பயணிக்கும்.(சாரத்தில் ஓடும்).
5.சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய், குரு, சனி ஆகியவை ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் வக்ரம் அடையும்.
6.சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய், குரு, சனி ஆகியவை பத்தாமிடத்தில் இருந்தால் சாதாரண வேகத்தை விட குறைவாக ஓடும். (மந்த கதியில் ஓடும்)
7.சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து சுக்கிரன்,செவ்வாய், குரு, சனி ஆகியவை பதினொன்றாவது இடத்தில் இருந்தால் சாதாரண வேகத்தில் ஓடும். (மத்ய கதியில் ஓடும்)
8.சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து செவ்வாய், குரு, சனி ஆகியவை பன்னிரண்டாவது இடத்தில் இருந்தால் சாதாரண வேகத்தை விட கூடுதலான வேகத்தில் பயணிக்கும்.(சாரத்தில் ஓடும்).சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து சுக்ரன், புதன், ஆகியவை பன்னிரண்டாவது இடத்தில் இருந்தால் வக்ரம் அடையும்.
கிரஹங்களின் வேகத்தினை பொறுத்து பலன்களை தீர்மாணிக்க பல்வேறு முறைகளை அரிய நூல்களான “மானசாகரீ”, “ஜாதக சார தீபம்”, ”ஜம்புநாத ஹோரா” போன்ற நூல்களில் கொடுத்துள்ளனர். அவற்றின் ஒரு பாடலில்
அதிசாரே ச வக்ரே ச தத்தத் ராசிகதம் பலம்
ப்ருஹஸ்பதேஸ்து தந்நாஸ்தி பூர்வ ராசிகதம் பலம்
இதன் பொருள்: எந்த கிரஹமும் அதிசாரத்தில் அடுத்த ராசியை அடைந்தாலும், அனுவக்கிரத்தில் முன் ராசியை அடைந்தாலும் அது எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியின் பலனையே கொடுக்கும். ஆனால் குருவிற்கு மட்டும் விதிவிலக்காக அது முன்னர் எந்த ராசியில் இருந்ததோ அந்த ராசியின் பலனை கொடுக்கும் என இந்த பாடல் கூறுகிறது. இது கோட்சாரம் மற்றும் பிறப்பு ஜாதகம் இரண்டிற்கும் பொருந்தும்.
உதாரணத்திற்கு கோட்சாரத்தில் மேஷராசிக்கு 6ம்மிடத்தில் கன்னியில் சனி இருப்பதாக வைத்துக்கொள்வோம். சனி பகவான் அனுவக்கிரத்தில் சிம்மத்திற்கு வந்தால் ஜாதகருக்கு 6ம்மிட பலன் கிடைக்காது. சிம்மம் 5 வது ராசியானதால் 5ம்மிட பலனே கிடைக்கும்.
ஆனால் குரு அதேபோல் மேஷ ராசிக்கு 6ம்மிடமான கன்னியில் இருந்து 5ம்மிடமான சிம்மத்திற்கு பிரவேசித்தால் 6ம்மிட பலனையே கொடுக்கும். 5ம் மிட சுப பலனை கொடுக்காது என்பதாகும். ஆகவே ஜாதக பலன் பார்க்கும் போது குரு பகவான் ராசியின் முதல் 5 பாகை அல்லது கடைசி 5 பாகையில் இருந்தால் அதனின் நிலையறிந்து அது அதிசாரத்திலோ, அனுவக்கிரத்திலோ என்பதை கவனித்து பலன் காண வேண்டும்.
குரு பகவான் ஒரு நாளைக்கு சம கதியில் சராசரியாக 5 மினிட் கடப்பார்
சாரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 9 மினிட் கடப்பார்
அதிசாரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 13 மினிட் கடப்பார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
Leave a reply