ஜ்யதுர்காவின் கருணையினாலே…
அயந க்ஷண வார ர்து மாஸ பக்ஷ ஸமா த்விஜ ।
ஸூர்யாதீநாம் க்ரமாஜ்ஜ்ஞேயா நிர்விஶகம் த்விஜோத்தம ॥
[பராசர ஹோரை அத்தியாயம் 3 பாடல்.33 ]
இதன் பொருள்: அயநம், முகூர்த்தம், தினம், ருது, மாசம், பக்ஷம், ஒரு வருஷம் இவையே சூரியன் முதலான ஏழு கிரஹங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலமாகும்.
இதன்படி பார்த்தால்
சூரியன் – ஒரு அயன காலம் ஆதிக்கம் செலுத்தும். இது கால அளவில் 6 மாதம் கொண்டது. இது உத்திராயனம், தக்ஷிணாயனம் என இருவகைப்படும். சூரியன் மகரத்திலிருந்து மிதுன ராசி வரை பிரவேசிக்கும் காலம் உத்திராயனம், கடகத்திலிருந்து தனுசு ராசி வரை பிரவேசிக்கும் காலம் தக்ஷிணாயனம் ஆகும்.
சந்திரன் – ஒரு முகூர்தம் (க்ஷணம்) ஆதிக்கம் செலுத்தும். இது கால அளவில் 48 நிமிடம் கொண்டது. 2 நாழிகை கொண்டது ஒரு முகூர்த்தம். ஒரு நாழிகை = 24 நிமிடம்.
செவ்வாய்- ஒரு நாள் ஆதிக்கம் செலுத்தும். அதாவது ஒரு பகலும், ஒரு இரவும் சேர்ந்தது ஒரு தினம் ஆகும்.
புதன் – ஒரு ருது ஆதிக்கம் செலுத்தும். ஒரு ருது என்பது 2 மாதத்தை குறிக்கும். அதாவது 60 நாட்கள். வருடத்திற்கு 6 ருது ஆகும், அவை வஸந்த ருது, க்ரீஷ்ம ருது, வர்ஷ ருது, சரத் ருது, ஹேமந்த ருது, சிசிர ருது ஆகியவையாகும்.
குரு- ஒரு மாசம் ஆதிக்கம் செலுத்தும். அதாவது 30 நாட்கள் ஆகும்.
சுக்கிரன் – ஒரு பஷம் ஆதிக்கம் செலுத்தும். ஒரு பஷம் 15 நாட்களை கொண்டது. இது வளர் பிறை, தேய் பிறை என 2 வகைப்படும்..
சனி- ஒரு வருடம் காலம் ஆதிக்கம் செலுத்தும்.
அதாவது
சூரியன் – 180 நாட்கள்
சந்திரன் – 48 நிமிடம்
செவ்வாய்- 1 நாள்
புதன் – 60 நாட்கள்
குரு – 30 நாட்கள்
சுக்கிரன் – 15 நாட்கள்
சனி – 360 நாட்கள் ஆதிக்கம் செலுத்தும் காலங்களாகும்.
மேற்குறிப்பிட்ட காலங்கள் எல்லாமே கிரஹங்களின் அதிக பட்ச காலத்தை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது. மேற்கண்ட கிரஹங்களோடு மாந்தி சேர்ந்தால் 3 மடங்கும், ராகு, கேது சேர்ந்தால்
இரு மடங்கும் காலம் நீட்டிக்கும்.
கிரஹங்களின் ஒவ்வொரு தசையிலும் புத்திற்கு பலன் காணும் போது, புத்தி கிரஹத்தின் கோட்சார நிலை பிறந்த ஜாதகத்தில் உள்ள தசா கிரஹத்திற்கு தொடர்பு பெறும்போது மேற்கூறிய கால அளவிலேயே சுப அசுப பலன்கள் நடப்பதை காணமுடிகிறது. (இதனின் சூட்சுமத்தை அநேக கிரந்தங்களோடு தனி பதிவு கொடுக்க இருக்கிறேன்)
ஜோதிஷத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தாலும், அது எப்பொழுது நடக்கும் என்பது அறிவது இன்றியமையாதது ஆகும். ஒரு கிரஹம் நல்ல பலனையோ, தீய பலனையோ எப்பொழுதும் தந்து கொண்டே இருப்பதில்லை. இங்கே கூறப்பட்ட கால அளவிலேயே இவை பலன் தருவதை நாம் அனுபவத்தில் காண முடிகிறது. இரு கிரஹம், மூன்று கிரஹம் தொடர்பு பெற்று ஒரு காரியம் நிகழும் பொழுது அந்தந்த கிரஹங்களின் காரஹபலன் அந்தந்த கால அளவிலேயும், அவற்றில் பலமான கிரஹம் எதுவோ அதனின் காலமே ஜாதகர் அனுபவிக்கும் நல்ல தீய பலன்களின் அதிக பட்ச காலமாக இருக்க முடிவதையும் காணமுடிகிறது. உதாரணமாக சனி பகவான் ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு வருடமும், செவ்வாய் அதிகபட்சமாக ஒரு தினமும் ஆதிக்கம் செலுத்தும் என்றால் ஒருவரின் ஜாதகத்தில் ஒருவருக்கு கால் எடுக்கவேண்டிய அமைப்பு ஜாதகரீதியாக வரும்போது சனி பகவான் என்றால் சிறுக சிறுக ஒரு வருடத்திற்கு அதற்கான வேலையையும், செவ்வாய் பகவான் என்றால் உடனடியாக அதற்கான வேலையை விபத்து போன்றவற்றின் மூலமும் செய்வார். இதைப்போலவே மற்ற அனைத்து நல்ல தீய பலன்களுக்கும் கிரஹங்களின் காலம் அறிந்து பலன் கூறுவது ஜோதிஷ சூட்சுமங்களுள் ஒன்றாகும்.
Leave a reply