ஜயதுர்காவின் கருணையினாலே!!!
திக் பலத்தில் புதுசாக அப்படி என்ன இருக்கிறது இதுதான் அனைத்து ஜோதிஷ புத்தகங்களிலும் உள்ளதே என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. இருந்தபோதிலும் இதில் நிறைய சூட்சுமம் அடங்கியுள்ளது. திக் என்றால் திசை என்று பொருள்.
கிரஹங்கள் எந்த திக்கில் இருந்தால் சுப பலன், அசுபபலன் என அறிவது திக்பலம் ஆகும்.
பொதுவாக கிரஹங்கள் இரண்டு வழிகளில் தன்னுடைய செயலை வெளிப்படுத்துகிறது.
1. வீட்டின் அதிபதி என்ற முறையில் பாவக பலனை வெளிப்படுத்துதல்.(பாவாதிபத்திய பலன்)
2. தன்னுடைய இயற்கையான குணத்தினை வெளிப்படுத்துதல்.(இயற்கை காரஹ பலன்)
இங்கு கிரஹங்கள் இயற்கையான குணத்தினை (காரஹ பலன்) எந்த அளவிற்கு கொடுக்கும் என அறிய திக்பலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
திக்பலத்தில் இருக்கும் போது கிரஹங்கள் காரஹ பலம் பெறுகிறது. இயற்கை காரஹரீதியிலான பலன் கொடுக்க திக் பலம் அவசியம் தேவை என நாம் புரிந்துகொள்ள வேண்டும்.என்னை பொறுத்த வரை திக் பலத்தினை 2 ஆக பிரிக்கலாம். அது சுப திக்பலம், அசுப திக்பலம்.
நூல்களில் சுப திக்பலன் பற்றிய குறிப்புகளே உள்ளன. முதலில் சுப திக்பலத்தினை காண்போம்.
கீழ்காணும் இடங்களில் கீழே கூறியுள்ள கிரஹம் இருந்தால் சுப திக்பலம்.
1ம்மிடம்—கிழக்கு—குரு, புதன் இருப்பது
4ம்மிடம்—வடக்கு—சுக்கிரன், சந்திரன் இருப்பது
7ம்மிடம்—மேற்கு—சனி இருப்பது
10ம்மிடம்—தெற்கு—சூரியன், செவ்வாய் இருப்பது
ஆகம பிரதிஷ்டையில் இங்கு கூறியுள்ள திக் பல திசையை நோக்கியே நவகிரஹங்கள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படுவது கவணிக்கபடவேண்டும். அதாவது இயற்கை சுபர்கள் கிழக்கிலும், வடக்கிலும் இயற்கை பாபிகள் தெற்கிலும், மேற்கிலும் சுப திக் பலம் அடைகிறார்கள்.
இதில் ஒரு மகத்தான சூட்சுமம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.அது என்ன சூட்சுமம் என்றால் குரு, புதன் லக்கினத்தில் இருந்தால் திக் பலன் உண்டு. அப்படியெனில் திக்பலன் அடையக்கூடிய பாவத்திற்கு 7ல் இருந்தால் திக்பலம் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் கிரஹமானது அதற்கு விரோதமான எதிர்திசையில் இருக்கும்.
அதாவது இயற்கை பாபிகள் கிழக்கிலும், வடக்கிலும் இயற்கை சுபர்கள் தெற்கிலும், மேற்கிலும் அசுப திக்பலம் அடைகிறார்கள்.
பொதுவாக திக்பலன் அடையக்கூடிய பாவத்திற்கு 7ம் பாவத்தில் ஒரு கிரஹம் இருந்தால் அசுப திக்பலன் அடையும். இதன்படி
1ம் பாவத்தில்—சனி
4ம் பாவத்தில்—செவ்வாய், சூரியன்
7ம் பாவத்தில்—புதன், குரு
10ம் பாவத்தில்—சந்திரன், சுக்கிரன் அசுப திக்பலன் அடைகிறது.
மேற்குறிப்பிட்ட பாவங்களில் அந்தந்த கிரஹங்கள் இருந்தால் அவைகளின் காரஹபலனில் கெடுதல் தருவதை காணமுடிகிறது.
பல்வேறு ஜாதகங்களை ஆராய்ததில் திக் பலன் அடைந்த கிரஹம் வக்கிரத்தில் இருந்தால் சுப பலனோ, அசுப பலனோ அதனை இரட்டிப்பு ஆக்குகிறது.
பொதுவாக லக்கினத்தில் குரு, புதன் வக்ரம் அடைந்தும், சுக்கிரன் 4ல் வக்கிரம் அடைந்தும், சனி 7ல் வக்கிரம் அடைந்தும், 10ல் செவ்வாய் வக்கிரம் அடைந்தும் இருந்தால் (இவைகளில் ஏதேனும் ஒன்று) அதிக நன்மைகளை செய்வதை காண முடிகிறது.
பகலில் பிறந்தவருக்கு சூரியன், குரு, சுக்கிரன் திக் பலம் அடைவதும், இரவில் பிறந்தவருக்கு செவ்வாய், சனி, சந்திரன் திக் பலம் அடைவதும் மிகுந்த நன்மை தருவதையும் நான் நிறைய ஜாதகங்களில் கண்டிருக்கிறேன்.
கிரஹமானது தான் திக் பலன் அடையக்கூடிய பாவத்திற்கு இருபுறத்தில் ஏதேனும் ஒன்றில் இருந்தாலும் சுப பலன் தருவதை அனுபவத்தில் உணர முடிகிறது.
.
இதன்படி,
12,1,2ம்மிடம்–குரு, புதன்
3,4,5ம்மிடம்–சுக்கிரன், சந்திரன்
6,7,8ம்மிடம்–சனி
9,10,11ம்மிடம்–சூரியன், செவ்வாய் இருந்தால் நன்மையே தருகிறது.
கிரஹமானது தான் அசுப திக்பலன் அடையக்கூடிய பாவத்திற்கு இருபுறத்தில் ஏதேனும் ஒன்றில் இருந்தாலும் அசுப பலனும் தருவதையும் அனுபவத்தில் காண முடிகிறது
12,1,2ம் பாவத்தில்—சனி
3,4,5ம் பாவத்தில்—செவ்வாய், சூரியன்
6,7,8ம் பாவத்தில்—புதன், குரு
9,10,11ம் பாவத்தில்—சந்திரன், சுக்கிரன் இந்த பாவங்களில் இருந்தால் தீமையே தருகிறது.
மேலும் பல சூட்சுமங்கள் திக்பலத்தில் மறைந்து இருப்பதால் அவற்றினை அடுத்த பதிவில் கொடுக்கிறேன்
Leave a reply