ஜயதுர்காவின் கருணையினாலே!!
நாம் காணக்கூடிய வான் வெளியை 12 ஆக பிரித்து உருவாக்கியதே ராசி மண்டலம் ஆகும்.
ஏன் 12 ஆக பிரித்தனர்?
ஏன் 9 அல்லது 10 ராசிகளாக பிரிக்கவில்லை என்பது பொதுவான கேள்வி.
நமது ரிஷிகள் வானமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உற்று கவனித்து வரும் போது சூரியன், தான் இருந்த இடத்திலிருந்து பயணித்து மீண்டும் அதே இடத்திற்கு வர ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறது. அந்த ஒரு வருடத்திற்குள் சந்திரனின் சுழற்சியால் 12 முறை பெளர்ணமி அல்லது அமாவாசை ஏற்படுவதாக கண்டனர். அதனால்தான் ராசிமண்டலத்தை 12 ஆக பிரித்தனர்.
ராசிமண்டலத்தின் அமைப்பிற்கும் சூரிய சந்திரன் ஓட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
சரி இங்கு நாம் சிந்திக்கவேண்டியது
ராசி என்றால் என்ன?
பாவம் என்றால் என்ன?
வானமண்டலத்தை 12 ஆக பிரிப்பது ராசி என கண்டோம். அப்படியென்றால் பாவம் என்பது என்ன?
பூமி தன்னைத்தானே சுற்றுவதால் சூரியனின் நிலையை பொறுத்து உருவாக்கப்படும் கற்பனை புள்ளியே லக்கினம் ஆகும்.
இதனில் நாம் தெளிவு பெற, பூமி மற்றும் சூரியனின் சுழற்சியினை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
சூரியன் தன்னுடைய மண்டலத்தில் எங்கும் நகராமல் நிலைத்து நிற்கிறது.
பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
சூரியனுடைய கதிர் வீச்சு பூமியின் பாதி பகுதியில் மட்டுமே விழுகிறது. அப்பகுதி வெளிச்சமாகவும், மற்ற பகுதி இருட்டாகவும் உள்ளது. பூமி தன்னைத்தானே சுற்றி வருவதினால், வெளிச்ச பகுதி மாறிக்கொண்டே இருக்கும். பூமியில் சூரிய உதயம், பகல், மதியம், மாலை, இரவு என எல்லாமும் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும். சூரியனின் கதிர்வீச்சு பூமியில் எந்த பிரதேசத்தில் பட்டு இருட்டு மறைந்து வெளிச்சம் உண்டாகிறதோ, அதற்கு இணையான வானமண்டலத்தில் அல்லது ராசியில் தான் சூரியன் இருக்கும். நேரம் ஆக ஆக காலை, பகல், மாலை, இரவு ஏற்பட லக்கினமும் சூரியன் இருந்த ராசியிலிருந்து தொடங்கி மாறிக்கொண்டே இருக்கும். பூமி சுற்ற, சுற்ற பிரதேசம் மாற மாற லக்கினமும் மாறிக்கொண்டே இருக்கும்.
பகல் 12 மணிக்கு சூரியன் உச்சியில் இருக்கும் போது சூரியனுக்கு 4 வது ராசியில் லக்கினம் இருக்கும். அதாவது லக்கினத்திற்கு 10வது ராசியில் சூரியன் இருக்கும்.
இதனைபோலவே மாலையில் சூரியனுக்கு 7வது ராசியில் லக்கினம் இருக்கும்.
ஆக நிலையாக இருக்ககூடிய வான்வெளி ராசியில் சுற்றி வரக்கூடிய புள்ளியே லக்கினம் எனக்கொள்ளலாம்.
தற்போது ஜோதிடரீதியாக பார்க்கும்போது. பாவமும், ராசியும் பலனுரைத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கிரஹம், ராசி, பாவம் இவையே ஜோதிடத்தின் அடிப்படை. இவற்றின் சேர்க்கையே பலனுரைத்தலுக்கு அவசியம்.
இவற்றில் கிரஹமே பிரதானமானது.
ஒரு கிரஹம் எவ்வளவு பலத்தில் செயல்படும் என்பதை ராசியை கொண்டும், எவ்வாறு செயல்படும் என்பதை பாவத்தைக்கொண்டும் தீர்மானிக்க வேண்டும்.
இதுவே ஜோதிஷத்தின் அடிப்படை ரகசியமாகும்.
கிரஹம் ராசியிலிருந்து பலத்தினை பெற்று, பாவத்திற்கு பலத்தினை கொடுக்கிறது.
கிரஹத்தினுடைய பலமானது அது ராசியில் அடையக்கூடிய உச்சம்,ஆட்சி, நட்பு, சமம், பகை, நீச்சம் போன்றவற்றினால் உறுதி செய்யப்படுகிறது.
அவ்வாறு பெறப்பட்ட பலத்தினை கிரஹமானது பாவத்திற்கு கொடுக்கிறது.
பாவாதிபதி கிரஹம், பாவத்தில் உள்ள கிரஹம், பாவத்தை பார்க்கும் கிரஹம்
இவற்றின் பலத்தை பெறுவதை பொறுத்தே பாவ பலம் தீர்மானிக்கப்படுகிறது.
ராசி என்பது கிரஹத்திற்கு பலம் கொடுப்பதிலும், பாவம் என்பது கிரஹத்திடமிருந்து பலத்தினை பெறுவதிலும் தான் ஜோதிஷத்தின் சூட்சுமம் இருப்பதாக நான் கருதுகிறேன்.
Leave a reply