மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா? என்ற கேள்வியுடன் இவ்வாரூடம் பார்க்கப்படுகிறது. இதில் பூவரசு இலைக்குள் வெள்ளை நிறப் பூக்கள் மட்டும் வைத்து தனி பொட்டலங்களாகவும், சிவப்பு நிறப் பூக்களை மட்டும் வைத்து தனி பொட்டலங்களாகவும் கட்டி, இப்பொட்டலங்களை ஒரு தாம்பூலத்தில் வைத்து, பூஜையறையில் விளக்கேற்றி குல தெய்வத்தையும், இஷ்ட தெயவத்தையும் மனதார வேண்டி, அப்பொட்டலங்களில் ஒன்றை கையில் எடுத்து பிரித்துப் பார்க்க, வெள்ளைப்பூ வந்தால் கார்ய சித்தி ஏற்படும். சிவப்பு நிற பூ வந்தால் கார்யம் தடைப்படும். இது இன்றளவும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ள ஆரூட முறையாகும்.
மலர் ஆருடம் பார்க்கும் முறை
ஆரூடம் கேட்பவரை ஏதாவது இரு மலர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டு அவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறித்துக் கொண்ட மலர்களுக்குரிய கிரகங்களை குறித்துக் கொள்ள வேண்டும். முதலாவதாக கூறப்படும் மலருக்குரிய கிரகம் சிந்தனையில் உள்ள கேள்விக்குரிய விசயத்தையும், இரண்டாவதாக கூறப்படும் மலருக்குரிய கிரகம் கேள்விக்குரிய விசயத்தின் சாதக பாதக நிலைகளையும் சுட்டிக் காட்டும்.
கிரகங்களும் அவற்றிற்குரிய மலர்களும் கீழே தரப்பட்டுள்ளன.
சூரியன் : செந்தாமரை, சூரியகாந்தி, வெள்ளெருக்கு
சந்திரன் : வெள்ளைஅல்லி, தும்பைப்பூ, சந்திரகாந்தி
செவ்வாய் : செவ்வரளி, சிவப்பு ரோஜா, பவளமல்லி
புதன் : மரிக்கொழுந்து, வெண்காந்தன், வெண்சங்கு
குரு : செண்பக மலர், முல்லை, மஞ்சள் சாமந்தி, சந்தன மல்லிகை, மஞ்சள் அரளி, பாதிரிமலர், மகிழ மலர், பூசணிப்பூ, இருவாட்சி, சம்பங்கி.
சுக்கிரன் : வெண்தாமரை, வெள்ளை ரோஜா, மல்லிகை, மனோரஞ்சிதம், நந்தியாவட்டை, புண்ணை மலர், வெள்ளை சாமந்தி.
சனி : கருங்குவளை (நீலத்தாமரை), கத்தரிப்பூ, சங்குப்பூ, வாடாமல்லி, கருச்செம்பை.
ராகு : மந்தாரை, சாரக்கொன்றை, துலுக்கா; சாமந்தி.
கேது செவ்வந்தி, தாழம்பூ, கனகாம்பரம், கொன்றை பூ, செம்பருத்தி
உதாரணமாக ஒருவர் முதலில் வெண் தாமரை மலரயும், இரண்டாவதாக செவ்வல்லி மலரயும் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். இதற்கான பலா பலன்களைப் பார்ப்போம்.
மலர் கிரஹம்
வெண்தாமரை சுக்கிரன்
செவ்வல்லி கேது
சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகம். கேது பிரிவினையைக் குறிக்கம். எனவே அவருடைய மனைவியுடன் அவருக்கு பிரிவினை ஏற்படலாம். இது ஒரு வகையான பலன்.
சுக்கிரன் பணம், வீடு, வாகனம் இவைகளைக் குறிக்கும் கிரகம், கேது தகராரைக் குறிக்கும். எனவே கேள்வி கேட்பவருக்கு பணம், வீடு, வாகனம் சம்பந்தமாக வழக்கு இருக்கலாம். இது மற்றொரு பலன். மொத்தத்தில் சுக்கிரன், கேது சேர்க்கைக்குரிய பலாபலன்களை கூறவேண்டும்.
மேற்கண்டவாறு ஆரூடம் கேட்பவரை இரண்டு பூக்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டு, அப்பூக்களைக் குறிக்கும் கிரகங்களைக் கண்டறிந்து, அவ்விரண்டு கிரகங்களையும் கிரக சேர்க்கையாக எடுத்துக் கொண்டு, அக்கிரக சேர்க்கைக்குரிய பலாபலன்களை நாடி ஜோதிட முறையில் கூறினால் பலன்கள் சரியாக இருக்கும்.
Leave a reply