ஒன்பதாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் தன் முயற்சியின்றியே பாக்கியங்கள் உண்டாதலும் பொருள் லாபங்கள் சொத்துக்கள் விருத்தி குடும்பசுகம் அதிகரிப்பதும், எண்ணிய காரியங்களில் விருப்பமும் தர்ம சிந்தை மேலான எண்ணங்கள் புகழ் முதலியன விருத்தியாவதும் ஆக மிகவும் மேன்மையான பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற அறப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் மேலும் மேலும் பொருட்சேர்க்கையும், சகல வித்தைகளிலும் பண்டிதனாகி புகழும் பெருமையும் அடைவதும் கதா காலட்சேபம் அல்லது ஆன்மீகப் பிரசங்கங்கள் மூலம் தனமும் புகழும் சேர்வதும் மனைவியிடம் அதிகமான பிரியமும் புத்திரபாக்கியங்களும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் சகோதரர்கள் உண்டாவர். சகோதரர்களுக்கு நன்மை உண்டாகும். செல்வம் சொத்துக்களின் மேல் அதிகமான இச்சையும் அவற்றை அடைவதற்கான கடும் முயற்சியும் உண்டாகும். தந்தை வழி சொத்துக்களுக்குச் சில விரயங்கள் ஏற்படும்.
ஒன்பதாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை நடத்தினால் கல்வியில் மேன்மையும் அழகாகப் பேசும் சாமர்த்தியமும் பெரிய அதிகாரியாக அல்லது தொழிலதிபராக அல்லது இராஜ்யாதிகாரியாக உயர்வு பெறுவதும் அரசாங்க கொளரவங்களும், புகழும் பாராட்டும் மகோன்னதமான நிலைமையும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஐந்தாமிடத்தில் இருந்து தசை நடத்தினால் தர்ம காரியங்களிலேயே மனம் செல்வது மேலும் மேலும் பாக்கிய விருத்தியும் திருமணம் மக்கட்பேறு போன்ற சுகங்கள் உண்டாவதும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதும் குருபூஜை சிவபூஜை முதலான காரியங்களில் ஈடுபடுதலும் தீர்த்தயாத்திரையும் தயாள குணமும் நீடித்து நிற்கும் படியான தர்மகாரியங்களை செய்து வைத்தலும் அதனால் புகழ் நிலைத்திருக்கும்படியாகச் செய்வதும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஆறாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் பித்ரு பாக்கியத்தை இழந்து இளமையிலேயே தரித்திரத்தை அடைவதும் அம்மான்மாரால் வளர்க்கப்படுவதும் நோய்களாலும் பகைவராலும் சொத்துக்கள் அழிவும் கஷ்டங்களும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை நடத்தினால் நல்ல மனைவியும் அவளால் சுகபாக்கியங்களை அடைவதும் உண்டாகும். அவன் திசையில் மேலும் மேலும் பொருள் இலாபங்களும் முயற்சிகளில் வெற்றியும் பிரயாணங்களால் நன்மைகளும் புகழும் சந்தோஷமும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் இளமையிலிருந்தே வறுமை அனுபவிக்க நேரும். தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்கள் நாசம், மூத்த சகோதரர்களுக்குக் கஷ்டங்கள் எவ்வித பாக்கியமும் இன்றி பிறர் கையை எதிர்பார்த்து வாழும்படியான நிலை, மேலும் மேலும் துக்கம் முதலானவை உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பல வழிகளிலும் சொத்து சுகங்கள் உண்டாவதும் இராஜ்யாதிகாரி அல்லது மடாதிபதி போன்ற உயர்ந்த பதவி ஏற்பட்டு புதுச்சொத்துக்களை நிர்வாகம் செய்யும்படியான வாய்ப்புக்கள் உண்டாவதும் தான தர்மங்களால் வெகு புகழை அடைவதும் குடும்பத்தில் சகல நன்மைகளும் ஏற்படுவதும், தன் சகோதரர்களுக்கு நன்மையும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் அற நிலையங்களில் உத்தியோகம் அல்லது அவற்றின் நிர்வாக பொறுப்பை ஏற்றல் கிராமம் நகரம் அல்லது நாட்டின் தலைவராதல் வெகு புகழ் வெகு சம்பாத்தியம் சன்மானங்கள் முதலான சகல நன்மைகளும் உண்டாகும்.
ஒன்பதாமதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் அநேகவித சன்மானங்களை அடைவதும் பந்தயம் சூதாட்டம், லாட்டரி போன்றவைகளில் வெற்றியும் காதல் கேளிக்கைகளில் விருப்பமும் தயாளகுணமும் உண்டாகும்.
ஒன்பதாமதிபன் பன்னிரேண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தையின் சொத்துக்கள் விரயமாதல் தரித்திர வாழ்க்கை, மிகவும் கஷ்ட ஜீவனம் முதலியவை உண்டாகும்.
Leave a reply