அஷ்டமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் மனைவி உயிருடன் இருக்கும் காலத்திலேயோ அல்லது அவளுக்கு மரணம் எற்படுவதாலோ இரண்டாவது விவாகம் ஒன்று நடைபெறலாம். அந்நியரால் பொருள் நஷ்டங்கள் உண்டாகும். எப்பொழுதும் பொருட் செலவுகளும் தனவிரயங்களும் ஏற்படும். தரித்திர வாழ்க்கையும் அற்ப ஜீவனமும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் இரண்டாமிடத்தில் இருந்து தசை நடத்தினால் பொருள் நஷ்டங்களும் அந்நியரை நம்பிப் பிழைக்கும் படியான நிலைமையும் குடும்பத்தைவிட்டு பிரிந்து வசிப்பதும் ஆண்டி போன்ற நிலைமையும் தன் சொற்களுக்கு மதிப்பு இல்லாமையும் எல்லோராலும் பரிகாசம் செய்யத்தக்க வாழ்க்கையும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் சகோதர நஷ்டம், பூமி, பொருள் நஷ்டங்களும், தைரியமின்மை பலக்குறைவும் நபும்ஸகத் தன்மையும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை நடத்தினால் தாய்க்குக் கண்டம், வீடு வாசல் வாகன நஷ்டம், தரித்திர வாழ்க்கை, உற்றார் உறவினர்களைப் பிரிந்து யாருடைய ஆதரவும் இல்லாமல் நிர்க்கதியாக இருக்கும் நிலைமை முதலியன உண்டாகும்.
அஷ்டமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் புத்திர சோகம் உண்டாதல் பைத்தியம் சித்தப்பிரமை அல்லது புத்தி மாறாட்டம் எற்படல் வயிற்றில் ரோகங்கள், வாக்கிய நாசங்கள் மாமன் வர்கத்திற்கும் கஷ்டங்கள் முதலியன உண்டாகும்.
அஷ்டமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை நடத்தினால் சந்ததி நாசம், தனக்கும் கண்டங்கள் சர்பபயம், உயரத்திலிருந்து விழுவதால் அபாயம், வாதரோகத்தால் கால்கள் முடக்கம், பொருள் நஷ்டங்கள் சகலவிதமான துன்பங்களும் உண்டாகும் மரணமும் ஏற்படக்கூடும்.
அஷ்டமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை நடத்தினால் மனைவிக்கு கண்டம், இரண்டாவது மனைவி ஏற்படல் தன் மருமகனுக்குக் கண்டம், பிரயாணங்களில் அபாயம், அந்நியரால் பொருள்கள் கவரபடல், வழக்கு வியாஜ்ஜியங்களில் தோல்வி போக சக்திக் குறைவு முதலிய பலன்கள் உண்டாகும்.
அஷ்டமாதிபன் அஷ்டமத்திலேயே இருந்து தசை நடத்தினால், வஞ்சனை, களவு போன்ற கெட்ட வழிகளிலும் குறுக்கு வழிகளிலும் பணம் சம்பாதித்தல் மனைவிக்கு கெட்ட பெயர் உண்டாதல் மனைவியின் சம்பாதியத்தால் அல்லது அன்னியர் தனத்தால் பிழைப்பு நடத்துவது போன்ற பலன்கள் உண்டாகும்.
அஷ்டமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை நடத்தினால் துணிந்து பாவங்களை செய்வதும், தர்ம விரோதமான காரியங்களில் ஈடுபடுதலும், அன்னியர் சொத்துக்கள், மனைவியர் மீது ஆசை கொண்டு கவர முயற்சிப்பதும் அதனால் கஷ்டங்களையும் அவமானங்களையும் அடைவது தர்மம், ஒழுங்கு மதம் ஆகியவற்றுக்கு எதிரான நடத்தையும் பிரச்சாரம் செய்வதும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தொழில் நாசம், பெயர் மங்குதல் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள அல்லது அவற்றைச் செய்ய நேர்தல் நாடுவிட்டுச்செல்லல் சென்றவிடத்தில் எல்லாம் கஷ்டங்கள், பிச்சைக்காரனுக்குச் சமமான வாழ்க்கை முதலியன உண்டாகும்.
அஷ்டமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் மூத்த சகோதரன் மரணம், தான் சம்பாதித்த எல்லாப் பொருள்களையும் இழந்து தரித்திரமடைதல், தன் பிள்ளைகளுக்குத் திருமணம் முதலான சுபகாரியங்களைச் செய்து வைக்க முடியாத கஷ்டங்கள், அதனால் மனோதுக்கம் முதலியவை உண்டாகும்.
அஷ்டமாதபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பலவிதமான கஷ்டங்கள் மனோதுக்கங்களும் ஆண்மைக் குறைவும், நித்திரை இல்லாது தவிக்கும் படியான நிலைமையும், கெட்ட நடத்தையும் பாவ காரியங்களில் ஈடுபாடும் உண்டாகும்.
Leave a reply