ஐந்தாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் தன் சொந்த முயற்சியாலும் தாயாதிகள் ஆதரவாலும் முன்னுக்கு வருவான் இரகசியங்களை அறியக்கூடிய சாமர்த்தியமும் திறமையும் உண்டாவதால் சோதிடம் மாந்திரீகம் போன்றவற்றில் திறமையும் புகழும் ஏற்படும். சூரியன் அல்லது புதனாக இருந்தால் துப்பறியும் வேலை பூமிக்கு அடியில் புதைந்துள்ள பொருள்களை கண்டு பிடித்தல் போன்ற திறமைகளும் உண்டாகும். செல்வமும் புகழும் ஏற்பட்டு மேலான வாழ்க்கை அமையும்.
ஐந்தாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் எதிர்பாராத தனலாபங்கள் உண்டாகும். பந்தயம் சூதாட்டம் ஹேஷ்ய வியாபாரங்கள் முதலியவற்றில் லாபங்கள் உண்டாகும். வெகு செல்வந்தராகவும் முன்கோபியாகவும் இருக்க நேரிடும்.
ஐந்தாமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் எப்பொழுதும் பொருள் இலாபம், காமசுகம் முதலியவை பற்றிய சிந்தனையாக இருப்பதும் வெகுகாலம் கழித்து புத்திர பாக்கியம் உண்டாதலும் தன் பிள்ளைகளிலோன்று பிரபலம் அடைந்து தனக்கு உதவியாக அமைவதும் உண்டாகும். புத்திர தோஷங்களும் ஏற்படும்.
ஐந்தாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை நடத்தினால் தனமும், புகழும் சுக வாழ்க்கையும் உண்டாகும். பெண்ணாக இருந்தால் நீண்டகாலம் தாய் வீட்டிலேயே இருந்து சகல சௌக்கியமாக இருப்பாள். மந்திரி பதவி அல்லது பெரிய ஆசிரியர் பதவியும் உண்டாகும். கல்வி மேன்மையால் புகழும் இலாபங்களும் உண்டாகும். பெரிய பதவியும் கிடைக்கும்.
ஐந்தாமாதிபன் ஐந்தாமிடத்திலேயே இருந்து தசை நடத்தினால் அத்திசையின் ஆரம்பத்தில் புத்திர தோஷங்கள் உண்டாகும். மேலான அறிவும் ஞானமும் உலகம் புகழத்தக்க குரு பதவியை அடைவதும் உண்டாகும் கல்விச் செருக்கால் சட்டென்று கோபம் கொள்பவராக இருப்பார்.
ஐந்தாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தன் பிள்ளைகளே தனக்குச் சத்துரு ஆதலும் அவர்களால் மனோ வியாகூலங்களும் உண்டாகும். பிள்ளைகள் சுய சம்பாத்தியத்தால் முன்னுக்கு வருவார்கள்.
ஐந்தாமாதிபன் ஏழாமிடத்தில் இருந்து தசை நடத்தினால் பலவிதமான தன லாபங்களும் தன் எதிரிகளையும் வசப்படுத்தி நடத்தும் திறமையும் மேலான பதவியும் புகழும் மேலும் மேலும் முன்னேற்றங்களும் உண்டாகும்.
ஐந்தாமாதிபன் எட்டாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் காசநோய் அல்லது வயிற்று நோய்களால் பலத்தத் தொல்லைகளும் நல்ல மனமில்லாதவராக வெறுக்கத் தக்க நடத்தையும் புத்திரசுகம் இல்லாமையும் உண்டாகும். பெரும்பாலும் பெண் குழந்ததைகளே உண்டாகும்.
ஐந்தாமாதிபன் ஒன்பது அல்லது பத்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் சகல பாக்கியங்களும் நிறைந்த மேலான வாழ்க்கை உண்டாகும், எல்லோராலும் புகழ்ந்து பாராட்டத்தக்க பெரிய ஆசிரியர் அல்லது கவிஞராகப் புகழ் பெறுவார். அரசர்களுக்குச் சமானமான வாழ்க்கை உண்டாகும். தன் குழந்தைகளும் மேலுக்கு வந்து புகழும் பெருமையும் எல்லோராலும் கொண்டாடத்தக்க நிலையும் அடைவார்கள்.
ஐந்தாமதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் வெகு செல்வமும் அநேக புத்திரர்களும், அதிகமான புகழும் உண்டாகும். ஜனத் தலைமையும் புகழும் உண்டாகும்.
ஐந்தாமாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் தனக்குப் புத்திரர் இல்லாமல் தத்து எடுத்து அல்லது விலைக்கு ஒரு பிள்ளையை வாங்கி வளர்க்க நேரிடும். புத்திரபாக்கியம் ஏற்பட்ட போதிலும் தன் மக்கள் தன்னை விட்டுப் பிரிந்தோ, மறைந்தோ, போகும்படியாக நேரிடும் தனக்கும் பிள்ளைகளுக்கும் சரியான உறவு இருக்காது. பிள்ளைகளால் கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாகும், சதாகலமும் காமசிந்தையாய் பொருள் விரயம் செய்ய நேரிடுவது உண்டு.
Leave a reply