மூன்றாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் ஆரம்பகாலத்தில் மற்றவர்களை அண்டி தொழில் செய்து அல்லது மற்றவர்களிடம் உத்தியோகம் பார்த்து ஜீவனம் செய்து பிறகு தன் சொந்த முயற்சியாலும் மனோதைரியத்தாலும் படிப்படியாக உயர்ந்து மேல் நிலைக்கு வரமுடியும் தனக்கு எப்பொழுதும் யாராவது சகாயம் செய்ய முன் வருவார்கள் மூர்க்கத்தனமான காரியங்களில் பிரவேசமும், அதனால் கஷ்டங்களும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் தன் முயற்சியின்றி இருப்பதும் அன்னியருக்கு பாரமாக ஜீவனம் நடத்துவதும் அன்னியர் சொத்துக்களின் மேல் ஆசையும் நண்பர்கள் சகோதரர்களுக்கு வேண்டாதவனாக இருக்கும் நிலைமையும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் கோழைத்தனமும் ரோகங்களும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் மனோதைரியமும் எவரையும் வசப்படுத்திவிடும் தன்மையும் எங்கும் தனக்கு நண்பர்களையும் உதவிசெய்பவர்களையும் உண்டாக்கி கொள்ளும் தன்மையும் பகைவர்களை சுலபமாக வெற்றி கொள்வதும் பின் சகோதரர்களுக்கு மேன்மையும் அதிகமான சந்ததிகள் உண்டாவதும் ஆன மேலான பலன்கள் உண்டாகும்.
மூன்றாமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் தன் சகோதரர்களுக்கு மேன்மையும் தனக்கு வசதிகள் சுபங்கள் குறைவும் எப்பொழுதும் தான் மற்றவர்களுக்காகத் தன் சுகவசதிகளை விட்டுக் கொடுத்து அவர்களுக்காக அலைய நேர்வதும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் மனைவியால் கஷ்டங்களும் அவளால் சுகக்குறைவும் தன் பிள்ளைகளுக்கு மேன்மையும் சகோதரர்களுக்கு நன்மைகளும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஆறாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் குடும்ப கலகமும், சகோதரர்களுடன் விரோதமும் தன் பிள்ளைகளுக்குச் சம்பாத்தியம் ஏற்படுதலும் தன் வயதிலும் மூத்த பெண்களிடம் தகாத இச்சை உண்டாதலும் அன்னியர் உடைமைகள் தன் வசமாதலும் மாமன் வர்க்கத்தார்க்கு உடல் நலக்குறைவும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் அரசாங்க விரோதம், பொதுஜனப்பகை, திருடனாக அல்லது அன்னிய ஸ்திரீகளிடம் தொடர்பு உடையவனாக வாழ்க்கை நடத்தல் பலவிதமான கஷ்டங்களும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் எட்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் சகோதர நஷ்டமும் தனக்கொரு உதவி இல்லாமல் திக்கில்லாமல் அலைதலும் கொடூர பாவ செயல்களில் விருப்பமும் அன்னியரால் அல்லது அரசாங்கத்தால் தண்டனைகளை அனுபவிப்பதும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஒன்பதாம் இடத்தில் இருந்த தசை நடத்தினால் சகோதரர்களுக்கு பாக்கிய விரத்தியும் தனக்கு மனைவியால் மேன்மை உண்டாவதும் தகப்பனுக்குக் கஷ்டங்களும் கெட்டப் பெயரும் பிதுர்ரார்ஜித சொத்துக்கள் விரயமும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் மனைவியால் தொல்லைகளும் மற்றவர் சகாயத்தால் தொழிலில் மேன்மை அடைவதும் பிறர் சொத்துக்களும் தன் வசமாதலும் அன்னியப் பெண் ஒருத்தியின் தொடர்பு உண்டாவதுமான பலன்கள் நடைபெறும்.
மூன்றாமாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் பலவிதமான தன லாபங்களும் எப்பொழுதும் காமவேட்கையும் அதனால் பொருட் செலவும் உடல் நலக்குறைவும் உண்டாகும், அன்னியரிடம் வேலை செய்வதால் அல்லது அன்னியரால் தன லாபங்கள் உண்டாகும்.
மூனறாமாதிபன் பனிரெட்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் கெட்ட வழிகளில் சம்பாத்தியமும் பெண்களால் லாபங்களும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையும் தந்தைக்குத் திருட்டு பட்டம் அல்லது கெட்டப் பெயரும் உண்டாகும்.
மேற்படி பலன்களை மற்ற திசைகளில் மூன்றாமாதிபன் புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்துத்
பலன் அறிந்து கொள்ள வேண்டும்.
Leave a reply