லக்ன பாவத்தில் சூரியன் இருப்பின் ஏற்படும் பலன்
தலைமயிர் குறைந்திருத்தல், தொழில் தேக்கம், சினம், கொடூர குணம், ஏளனம் செய்தல், எனினும் சிலருக்கு விருப்பமானவர், கொடூரமான பார்வை, கடின உடல் வாகு, வீரம் நிறைந்தவர், பொறுமையற்றவர், தயவின்மை கொண்டவர்.
லக்ன பாவத்தில் சந்திரன் இருப்பின் ஏற்படும் பலன்:
கடகம், மேஷம், ரிஷபம் இவை லக்னமாக இருந்தால் பிற மனிதரின் மனதை அறியும் தன்மை உள்ளவர், அழகு, செல்வம் அனுபவிக்கும் குணம் இருக்கும், தேய்பிறை சந்திரனாக இருந்தால் முற்கூறிய பலன்கள் குறைவுபடும். மற்ற ராசிகள் லக்னமாக வந்தால் அதில் சந்திரன் இருப்பின் பித்தனாகவோ, நீசனாகவோ, உடலில் குறையுள்ளவர்களாகவோ, தகுதியற்ற பேச்சுடையவராகவோ இருப்பார். தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் வலுகுன்றிய நிலையில் இருந்தாலும் மேற்கூறிய பலன்கள் கண்டிப்பாக நடைபெறும்.
லக்ன பாவத்தில் செவ்வாய் இருப்பின் ஏற்படும் பலன்:
கொடூர தன்மை உடையவன், எவரும் செய்ய முடியாத செயல்களை செய்தல், இரக்கமின்மை, செல்வம், வீரம், பற்றும் பாசமும் உடையவர். மிடுக்கான உடலமைப்பு, உடலில் தழும்பு உள்ளவர், சபலப்படுபவர்.
லக்ன பாவத்தில் புதன் இருப்பின் ஏற்படும் பலன்:
எப்பொழுதும் கேடில்லாத உடல், வலிமையுடன் இருத்தல், அறிவும், ஆற்றலும், காலத்தை உணர்த்துதல், பொதுவிஷயங்கள் பற்றிய தெளிவு, குலத்தின் ஒழுக்கம், ஞான சிந்தனை, காவியம், சோதிடம் மற்றும் கணித அறிவுகளை தெரிந்து கொள்பவர்.
லக்ன பாவத்தில் குரு இருப்பின் ஏற்படும் பலன்:
அழகான கட்டுடல், கூடுதல் வலிமை, முழு ஆயுள், நன்கு ஆராய்ந்து செயல்களை செய்பவர், ஆற்றலும், கல்வியும், திறமையும், அறிவும், வீரமும் உடையவர், மதிக்க தகுந்தவர்.
லக்ன பாவத்தில் சுக்கிரன் இருப்பின் ஏற்படும் பலன்:
அழகுள்ள கண்கள், முகம் மற்றும் அழகான உடலமைப்பு உடையவர், இன்பம், முழு ஆயுள், வீரமின்மை உள்ளவர், பார்ப்பவர்களின் கண்களுக்கு அமிர்தமழை பொழிபவராவர், கவர்ச்சி உடையவர்.
லக்ன பாவத்தில் சனி இருப்பின் ஏற்படும் பலன்:
துலாம், மகரம், கும்பம், ஆகியவற்றில் லக்னமாகி அதில் சனி இருந்தால் அரசருக்கு இணையாக இருத்தல் அல்லது நாடு, நகரங்களுக்கு முக்கியமானவராகவும் உயர்ந்த பதவியிலும் இருப்பார். மற்ற ராசிகள் லக்னமாக இருந்து அதில் சனி இருந்தால் இளமையில் நோய், ஏழ்மை, துக்கம், சிற்றின்ப தாக்கம், தூய்மையின்மை, சோம்பல், தனுசு, மீனம் லக்னமானால் சில நற்பலன்கள் நடைபெறும்.
லக்ன பாவத்தில் ராகு இருப்பின் ஏற்படும் பலன்:
நீண்ட ஆயுள், வலிமை, ஸ்ரீலஷ்மியில் அருளால் செல்வம், உடலின் மேற்பகுதிகளில் அதாவது தலை, முகம் போன்ற இடங்களில் நோய் உள்ளவர்.
லக்ன பாவத்தில் கேது இருப்பின் ஏற்படும் பலன்:
நன்றி மறப்பவர், இன்பம் இல்லாதவர். புறம் கூறுபவர். பிறரை இருக்கும் நிலையிலிருந்து கீழே தள்ளுபவர். உடலில் ஊனமும், வஞ்சகர் நட்பும் உடையவர்.
Leave a reply