லக்கினாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் உடல் நலமும் பிரகாசமும் மகிழ்ச்சியும் உண்டாகும் மனத்திற்கு உற்காக மளிக்கத்தக்க நன்மைகளும் சுபகாரியங்களும் நடைபெறும், புகழும் பெருமையும் உண்டாகும் நினைத்த காரியங்கள் நன்மை பெறும் லக்கினாதிபனுடைய பலத்திற்குத் தகுந்தபடி செல்வமும், வசதியும் உடைய வாழ்க்கை அமையும்.
லக்கினாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் மனைவியால் யோகம் உண்டாகும். குடும்ப சுகம் பெருகும் நல்வாக்கும், கௌரவமும் வாக்கினால் இலாபங்களும் உண்டாகும்.
லக்கினாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் சகோதரர்களால் நன்மையும் தனக்கு வேண்டிய காரியங்களை செய்வதற்குத் தக்க துணைவர்கள் மற்றும் உதவியாட்கள் தாமாகவே உண்டாவதும் தமது மனோ தைரியத்தால் வெற்றியும் புகழும் அமைவதும் யோக சுகத்தில் லயிப்பும் சகோரர்களுக்கு நன்மையும் உண்டாகும்.
லக்கினாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை நடத்தினால் தாயால் அல்லது மாமன் வர்க்கத்தாரால் நன்மைகளும் வித்தையும் வீடுவாகனங்கள் சேர்வதும் அவற்றால் இலாபங்கள் உண்டாவதும் தன் சகோதரர்களுக்குப் பொருள் இலாபங்கள் ஏற்பட்டு அதனால் தானும் லாபங்கள் அடைதலும் வியாபார விருத்தியும் தொடர்ந்து மேன்மைகளும் உண்டாகும்.
லக்கினாதிபன் ஐந்தாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் புத்திரர்களால் லாபங்களும் தன் புத்தியாலும் வித்தைகளாலும் மேலான புகழ் இவற்றை அடைவதும் மற்றும் உபதேசம் பெறுவது வீடு வாகனங்களால் லாபங்கள் உண்டாவதும் ஆகும். லக்கினாதிபன் ஐந்தில் இருந்து தசை நடத்தினால் தசை ஆரம்பத்தில் புத்திரசோகம் ஏற்படும் என்பது சிலர் கருத்து.
லக்கினாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் அக்காலத்தில் பகை, வம்புகுகள், கடன்கள் நோய்கள் முதலியவற்றால் பலவிதமான கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும். மனைவியை இழக்க நேரிடும். தன் மக்களின் சம்பாத்தியத்தால் வாழ்க்கை நடத்த நேரிடும் தாயாதிகளால் குடும்ப சிக்கல்கள் பாகப் பிரிவினை போன்ற தொல்லைகளும் உண்டாகும். கோயில் சொத்துக்களை அனுபவிக்கவும் அவ்வழியாகவே நஷ்டங்களை அடையவும் நேரிடும்.
லக்கினாதிபன் ஏழாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் திருமணம் மகப்பேறு போன்ற நன்மைகள் உண்டாகும் அல்லது தன் மகளுக்கு மணம் செய்து கொடுத்து பேரப்பிள்ளைகளை அடைவதும் கூடும். கூட்டு வியாபாரம் அமையும். வழக்குகளில் வெற்றி பெற்று தன் பகைவரின் சொத்துக்களை அடையவும் கூடும் பிராயணங்களால் இலாபங்கள் உண்டாகும்.
லக்கினாதிபன் எட்டாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் மரண பயம் அல்லது அதற்குச் சமமான கண்டங்கள் உண்டாகும். கடனால் அவமானங்கள் ஏற்படும். திருடர்களுடன் சம்பந்தம் எற்படும். அதனால் சிறை தண்டனைகள் அனுபவிக்கும் படியாகவும் நேரலாம். பலவிதமான கஷ்ட நஷ்டங்களும் துன்பங்களும் உண்டாகும்.
லக்கினாதிபன் ஒன்பதாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். மனைவியால் பாக்கிய விருத்தியும் சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். சகல விதங்களிலும் மேலான சுகங்கள் நிறைந்த வாழ்க்கை உண்டாகம் தன் சகோதரனுக்கும் நன்மை உண்டாகும்.
லக்கினாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் தொழில் மேன்மை வியாபார விருத்தி தன் பெயர் நாலாதிசைகளிலும் பரவுதல், அந்நிய நாடுகளிலும் வியாபாரத் தொடர்புகள் ஏற்படல், வியாபார நிமித்தமாகவும் தீர்த்தயாத்திரை ஸ்தல தரிசனம் போன்ற காரியங்களுக்காவும் பிரயாணங்கள் முதலியவை ஏற்படும்.
லக்கினாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் பலவிதங்களிலும் பொருள் லாபம் ஏற்படும். தன் மூத்த சகோதரர்ருக்கு லாபங்கள் சுகபாக்கிய விருத்திகளும் உண்டாகும். தன் பிள்ளைகளுக்கு திருமண பாக்கியம் மகப்பேறு முதலியன உண்டாகும். பெண் தொடர்பு ஏற்படும், தாய்க்கு மரணம் ஏற்படும்.
லக்கினாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் சொத்துக்களை துறந்து பற்றற்ற வாழ்க்கையும் மோட்ச மார்க்கத்தில் மனம் செல்வதும் மந்திர வித்தைகள் இரகசியமான விஷயங்கள் மற்றும் பிறவிக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் அறிய முற்படுதலும் போன்ற பலன்கள் உண்டாகும். பக்தி சிரத்தை அதிகமாகும். லக்கினாதிபன் கெட்டுப்போயிருந்தால் கஞ்சத்தனமும் பெரும் சூது, கபடத்தனம் முதலானவற்றின் மூலம் பணம் சேர்க்க முயற்சியும் அதனால் சில தோல்விகளும் நஷ்டங்களும் அன்னியர் மனைவியின் சேர்க்கையும் அதனால் அவமானம் பொருட்செலவுகளும் உண்டாகும்.
மேற்படி பலன்களை மற்ற திசைகளில் லக்கினாதிபனுடைய புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்துத் பலன் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கிரகத்திற்கு இரண்டு ஆதிபத்தியம் ஏற்பட்டால் அந்த இரண்டில் எந்த வீட்டில் அமைந்துள்ளதோ அதற்குரிய பலனையே விசேஷமாக செய்யும் அப்படித் தன் சொந்த வீடுகளில் ஒன்றியிருக்காமல் வேறு வீடுகளில் இருக்கும்போது லக்கினத்தை எண்ணும்போது முதலாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை தன் திசை அல்லது புத்தி நடைபெறும் காலத்தில் பாதிவரையிலும் நடத்திப் பிறகு இரண்டாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை நடத்துவார். லக்கினாதிபன் அஷ்டமாதிபதியாகவும் ஆகும் பொழுது (மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், துலாலக்கனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்) தன் திசையின் பிற்பகுதியிலும் லக்கினாதிபனுக்குரிய யோக பலன்களை நடத்துவர்.
Leave a reply