ஜயதுர்காவின் கருணையினாலே..
நான் ஒருசமயம் கும்பகோணத்தில் வசிக்கும் ஒரு ஜோதிடரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் என்னிடம் கலைஞானம் பாதம் பற்றி கேட்டார். அதற்கான பதிலே அவரிடம் கூறினேன். அதனை தங்களுக்கு கூறவே இப்பதிவு என கொள்ளலாம்.
குமாரசாமியத்தில் இதற்கான பாடல்,
முயலகன்சே ருடுக்காற்குக் கலைக்யானம் பதமாய்
மொழியிலண முடிகடையான் முதன்மானற் கடிகை…
இதற்கு பொருளாக உரை எழுதிய அனைவரும் (குமாரசாமியத்தின் அனைத்து பதிப்புகளும்) சந்திரன் நின்ற நக்ஷத்திர பாதத்திலிருந்து 64 வது பாதம் ”கலைஞானம்” என்ற பொருள்படும்படி எழுதி உள்ளனர். .
இங்கு முயலகன் என்பது நடராசப்பெருமான் ஏறி நடிக்கும் பூதம் (64) ஐ குறிக்கிறது என நினைக்கிறேன்.
மூடாய முயலகன் (தேவா. 878) மன்னுபெரும்பிணியாகும் முயலகன் வந்தணைவுற (பெரியபு.திருஞான. 311).
சந்திரன் நின்ற நக்ஷத்திர பாதத்திலிருந்து 64 வது பாதத்தினை பற்றிய ஏதாவது குறிப்புகள் இருக்கிறதா என சம்ஸ்கிருத ஸ்ருதிகளை தேடியபொழுது
ஜாதகதேஸ்மார்கத்தில் மரணநிர்னய அத்தியாயத்தில் பாடல் 19ல்
ஜந்மநி லக்நோபகதாச்சந்த்ரோபகதாந்ந்வாம்ஶகாத்வாஅபி
சதுருத்தரஷஷ்டயம்ஶகபே லக்நே வா ஸமாதிஶேந்மரணம்
இதன் பொருள்: லக்கினம் அல்லது சந்திரன் நின்ற நவாம்ச ராசியிலிருந்து 64வது ராசியில் கோட்சார சந்திரன் பிரவேசிக்கும் போது மரணம் ஏற்படும். மற்றும் அப்போதய லக்னம் இந்த 64 வது ராசியில் உதயமாகும்போது மரணம் சம்பவிக்கும் எனபதாகும்.
64 வது ராசி (பாதம்) என்பது நவாம்சத்தில் 4 வது ராசியாக வரும் என்பதாகும் (64/12= மீதி 4, ஈவு 5)
மேலும் இதற்கு இணையாக ஜாதக பாரிஜாதத்தில் இரு பாடலானது
அத ச்சித்ரக்ரஹா
ரந்த்ரேஶ்வரோ ரந்த்ரயுக்தோ ரந்த்ரஷ்டா ஸ்வரேஶ்வர:
ரந்த்ராதிபயுதஶ்சைவ சதுஷஷ்டயஂஶநாயக:
ரந்த்ரே ஶ்வராதிஶத்ருஶ்ச ஸப்த ச்சித்ரக்ரஹாஸ்ம்ருதா
தேஷாஂ மத்யே பலீ யஸ்து தஸ்ய தாயே ம்ருத்திவதேத்
இதன் பொருள்: 8ம் வீட்டு அதிபதி, 8ம் வீட்டில் உள்ள கிரஹம், 8ம் வீட்டினை பார்க்கும் கிரஹம், கர அதிபதி- 22வது திரேக்காணாதிபதி, 8வ் வீட்டின் அதிபதியுடன் இனைந்த கிரஹம், சந்திரன் நின்ற நக்ஷத்திரலிருந்து 64 வது பாத நவாம்ச அதிபதி, 8ம் வீட்டின் அதிபதியின் அதிசத்ரு கிரஹம்.
ஒரு கிரஹம் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் மேலே கூறியதில் தொடர்பு இருந்தால் அது தன்னுடைய தசையில் மாரகம் தரும் என்பதாகும்.
இங்கு சந்திரன் நின்ற நக்ஷத்திரலிருந்து 64 வது பாத நவாம்ச அதிபதியை மாரகத்திற்கு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஜாதக பாரிஜாதகத்தில் ஒரு பாட்டில்
விலக்நஜந்மத்ரேக்காணாத்யஸ்து த்வாவிஂஶாதி ஸ்வர:
ஸுதாகரோபகாஂஶர்க்ஷாத் சதுஷஷ்ட்யஂஶகோ பவேத்
இதன் பொருள்: லக்கினத்திலிருந்து 22வது திரேக்கானம் கர திரேக்கானம், சந்திரன் நின்ற நக்ஷத்திரலிருந்து 64 வது பாத நவாம்ச அதிபதி கர நவாம்சாதிபதி. (கர- வியாதி வகையில் தீவிரமான)
மேலும் ஜம்புநாத ஹோராவில்
ஜந்மலக்நேந்துகா நம்தபாகா: க்ரமாத்வேஷஷ்டயம்ஶராஶௌ ப்ரயாதே தநௌ
ம்ருத்யுஜந்மாங்கநீசோதயே ஶூந்யகே துஷ்டபாகோதயே தேஹம்ருத்கிர்பவேத்
இதன் பொருள்: லக்கினதிலிருந்து 7ம் வீடு, 8ம் வீட்டிலிருந்து 7ம் வீடு (2வது வீடு), லக்கினம் அல்லது சந்திரனிலிருந்து 64வது பாத நவாம்சம் இம்மூன்றில் ஒன்று அப்போதய லக்கினமாக இருக்கும் போது ஒருவர் மரனம் அடைவார் எனபதாம். இம்மூன்றில் லக்கினாதிபதியின் பின்னாஷ்ட வர்கத்தில் எந்த ராசி குறைவான பிந்து பெற்றுள்ளதோ அதுவே அதிக கெடுதல் தரும் என்பதாம்.
மேலும் பிரசன்ன மார்கத்தில்
சந்த்ராம்ஶேஶஸ்ய ததுபூஷா நவாம்ஶேஶோ தவா ரவே;
லக்நேஶோ வாபி யகேவம் ஸ்வல்பமத்யசிராயுஷ:
இதன் பொருள்: நவாம்சத்தில் சந்திரன் இருந்த வீட்டின் அதிபதி, சந்திரன் நின்ற நக்ஷத்திரலிருந்து 64 வது பாத நவாம்ச அதிபதிக்கு பகையாக இருந்தால் அல்ப ஆயுளும், சமமாக இருந்தால் மத்திய ஆயுளும், நட்பாக இருந்தால் நீண்ட ஆயுளும் இருக்கும்.
மேலும் ஹோரா ரத்தினத்தில்
ஜந்மலக்நாம்ஶ்காச்சந்த்ராநவாந்ஶாதத வாபி வா
ராஹௌ சது; ஷஷ்டிமிதே நிகநம்ச விநிர்திஶேத்
இதன் பொருள்: லக்கினம் அல்லது சந்திரன் நின்ற நவாம்சத்திற்கு 64 வது நவாம்ச வீட்டில் கோட்சார ராகு பிரவேசிக்கும் போது ஒருவருக்கு மரணம் சம்பவிக்கும்.
மேற்கண்ட பாடல்கள் அத்தனையும் 64 வது பாதமானது இறப்பின் காலத்தை அறிய பயன்படும் ஒரு உபாயம் என்பதனை தெளிவாக எடுத்துகூறுகிறது. அப்படியெனில் குமாரசாமியத்தில் உள்ள பாடலுக்கு எது விளக்கமாக இருக்கமுடியும் என காணும் போது ”கலைஞானம்” என்பதற்கு பதில் இங்கு ”காலஞானம்” என்று சுவடியில் இருந்திருக்கவேண்டும். அதை பதிபித்தவர்கள் தவறாக ”கலைஞானம்” என்று பதிவிட்டுவிட்டார்கள். காலஞானம் (காலன் – யமன், ஞானம்-அறிவது) என்பது இறப்பினை அறியும் காலம் என பொருள்கொள்ளலாம்.
குமாரசாமிய பாடலை திருத்தி அமைத்தால்
முயலகன்சே ருடுக்காற்குக் காலஞானம் பதமாய்
மொழியிலண முடிகடையான் முதன்மானற் கடிகை…
இதனை வலுசேர்க்கும் விதமாக குமாரசாமியத்தில் இப்பாடலில் அடுத்தடுத்த வரிகளில் தொடர்ந்து அபிஜித் நக்ஷத்திரம், அக்கினி நக்ஷத்திரம், வைநாசிகம், கிரஹன முன், பின் 3 நக்ஷத்திரங்கள், பாடாவாரி நக்ஷத்திரங்கள் ஆகிய தீமை தரும் நக்ஷத்திரங்களையே கூறியுள்ளது கவணிக்கத்தக்கது ஆகும்.
Leave a reply